Monday, August 31, 2015

சம்ஸ்க்ருதமும்,தமிழும் சைவத்தின் இரு கண்கள்

சம்ஸ்க்ருதமும்,தமிழும் சைவத்தின் இரு கண்கள்
சம்ஸ்க்கிருதம்,தமிழ் ஆகிய இரு மொழிகளையும் எமக்கருளியவர் சிவபெருமான் என்பதை முதலில் சைவர்கள் நன்றாக கருத்தில் கொள்ளவேண்டும். இன்று தாம் சைவர்கள் என்று கூறுவோர் பலர் சம்ஸ்க்ருதத்தினை புறக்கணிப்பதை பார்க்கும் பொழுது மனம் வேதனையடைகிறது. காரணம் சைவரல்லாதவர்கள் சம்ஸ்க்ருதத்தினை புறக்கணிக்கலாம், ஆனால் சைவர்கள் அவ்வாறு செய்வது தன தலையிலேயே மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் செயலை ஒக்கும். சம்ஸ்க்ருத பாஷையை வெள்ளையர்கள் படித்து நூற்களை எழுதுவதைப் பார்த்த பிறகும் சைவர்கள் அதைப்படிக்காமல் அல்லது சம்ஸ்க்ருத மஹிமையறியாது இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
சம்ஸ்க்ருதம் என்பது ஒரு மாநிலத்திற்கு சொந்தமானதல்ல அது சத்சைவர்கள் வாழும் இடமெங்கும் உயிரோட்டமாக இருக்கும். நன்னூல் சேனாவரையம் முதலிய இலக்கண நூல்கள் சம்ஸ்க்ருதம் எல்லா தேசத்திற்கும் பொது என்று கூறுகின்றன. திருமுறையாசிரியர்களும்..
• “ஆரியத்தோடு செந்தமிழ் பயனறிகிலா அந்தகர்
• ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
• செந்தமிழோடாரியனைச் சீரியானை
• ஆரியந் தமிழோடிசை யானவன்
• வடமொழியுஞ் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்
• வடசொலும் தமிழ்ச்சொலும் தாள் நிழல் சேர”
என்றெல்லாம் கூறியிருப்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும். இதுவரையில் நம் நாட்டில் மற்ற சமயங்களால் தான் சைவசமயத்திற்கு கஷ்டங்கள் நேர்ந்ததை வரலாற்றால் அறிகிறோம். ஆனால் இன்றோ ஒரே சமயத்துக்குள் இருந்துகொண்டு மொழியின் பெயரால் அழகிய சமயத்தை பிரிக்க நினைக்கும் இவர்களை பார்க்கும் பொழுது இது கலியின் கொடுமையோ ஆணவத்தின் வலிமையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் இவர்கள் எல்லாம் சிவபக்தர்கள் தானா என்றும் ஐயம் உண்டாகிறது. சம்ஸ்க்ருதம் சைவர்களுக்கு தேவை இல்லை என்றால் ஞானசம்பந்தப்பெருமான் முதல் சிவனடியார்கள் அனைவரும் அதைப் போற்றுவானேன்? சிந்தியுங்கள். உண்மைநூற்களை படியுங்கள்.தெளியுங்கள். பிறரால் பேசப்படுவதை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றை உண்மை என்று நம்பாதீர்கள். உண்மை என்ன என்று நீங்களும் ஆராயுங்கள்.
சைவசமயம் சார்பான சம்ஸ்க்ருத நூற்கள் பல இன்னும் வெளிவராமல் ஓலைச்சுவடிகளாகவே இருக்கின்றன. காரணம் நம் நாட்டுச் சைவர்கள் சம்ஸ்க்ருதத்தில் உள்ள நூல் என்று ஒதுக்குகின்றனர், அவற்றை வெளியிடுவதும் சத் சைவர்கள் கடனே. இதுவரை எளியேனால் கூறப்பட்ட கருத்துக்களை மனத்தில் கொண்டு
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்னும் பொய்யாமொழிக்கிணங்க திருமுறைகள்,மெய்கண்ட சாஸ்த்திரங்கள், தாயுமானவர், அருணகிரிநாதர் போன்ற அநுபூதிச் செல்வர்களின் நூற்களில் எங்காவது ஓரிடத்தில் சம்ஸ்க்ருதம் சைவர்களுக்கு அல்ல என்றோ அது வடநாட்டிற்குரியது என்றோ கூறுகிறார்களா என்று ஆராயுங்கள். அப்படியொரு கருத்தை உங்களால் காணவே முடியாது.
சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்து சைவத்தையும், தமிழையும் போற்றிவளர்த்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஆகியோரது நூற்களைப் படியுங்கள். உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். பிறகு குறுகிய மனம் படைத்து இக்காலத்து அறிஞர்கள் சிலரின் நூற்களைப் படியுங்கள். சோற்றுக்குள் முழுப்பூசணிக்காயை மறைக்கமுயலும் அவர்களது இயல்பு உங்களுக்குத் தானாகவே விளங்கும்.
“சமயம் நமக்கு என்ன செய்தது என்று பார்க்காமல் சமயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று பாருங்கள்” இதனை மையமாக கொண்டு சைவசமயம் வளர ஒவ்வொரு சைவரும் தங்களால் இயன்றளவும் பணியாற்ற வேண்டும். அதுவே நமது கடன். இவைகளை செய்தால் மேன்மைகொள் சைவநீதி உலகமெல்லாம் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

No comments:

Post a Comment