Thursday, September 3, 2015

சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'

சிவாயநம' என்போம்.
ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை.
இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்.
சிவாயநம என்பதை
"சிவயநம'
என்றே உச்சரிக்க வேண்டும்.
சி- சிவம்;
வ- திருவருள்,
ய-ஆன்மா,
ந-திரோதமலம்,
ம-ஆணவமலம்.
திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.
சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்

1 comment: