Saturday, November 14, 2015

கொடியேறியதும் தேரோடியதும் தமிழ் மொழியின் ஆற்றலா

கொடியேறியதும் தேரோடியதும் தமிழ் மொழியின் ஆற்றலா?
'உமாபதி சிவாச்சாரியார் கொடிக் கவி பாடிச் சிதம்பரத்தில் தானாகக் கொடியேற வில்லையா?' என்கிறார் தற்கால நவீன(அ)நாகரீகத் தமிழர்.
சமாதானம்:திருமுறைகள் போற் கொடிக்கவியும் நூலாற்றலுடையதே. மேலும் சம்ஸ்கிருத மந்திரங்கள் பலவற்றை அது போற்றியுள்ளது; அதனையும் ஓர்க. அவ்வாசாரியார் பாடினார். அக்கொடியேறியது. அதுவும் ஓரற்புதம். அது ஒரு முறைதான் நடந்தது. அதற்குப் பிறகு பல ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கிறார். அக் காலங்களிலுங் கொடியேற்றங்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் அவர் அக் கவியைப் பாடினாரா? அக் கொடி ஏறினதா? அக் கொடிக்கவி நூல் இன்றும் இருந்து வருகிறது. தீக்ஷிதர் அதைப் பாடி வருகின்றனரா? கொடி ஏறி வருகின்றதா? இல்லை அக் கவியால் கொடி ஏறியது ஒரே முறைதான்.
நவீனர் அப்பாட்டைப் பாடக் கொடி ஏறுவதாயிருந்தால் இன்றும் பாடி ஏறச் செய்யலாம். அதைத் தடுப்பார் யாருமிலர். இன்னொன்று அச்சிதம்பரத்திலே திருப்பல்லாண்டு பாடத் தேரோடியது. அதுவுமொருமுறை தான் நிகழ்ந்தது. முடியுமானால் இப்போதும் அவர் அப்பாட்டைப் பாடி அத்தேரை ஓடச்செய்க. அதில் இலெளகீக நலனும் அதிகமுண்டு.
அற்புத நிகழ்ச்சியாகிய கொடி யேற்றத்துக்கு முன்னும் பின்னும் நாளிதுவரை சிவாகம விதிப்படி தான் அத்தலத்திற் கொடியேற்றப்பட்டு வருகிறது. சுரந் தீர்த்த பதிகம் முயலகனை நீக்கிய பதிகம் முதலியவற்றை எடுத்துக் காட்டி மருத்து நூல், செளக்கிய நூல் விதிகளை உதறித் தள்ளுக வென்றால் யார்தான் தள்ளுவர்? அப்படியே கொடிக் கவியை காட்டிச் சிவாகம விதிகளை உதறித்தள்ளுக என்றால் சைவ மக்கள் யாரும் தள்ள மாட்டார்.

No comments:

Post a Comment